உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்
வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து நெகிழ்ந்து கொண்டு இருக்கையில், நம்ம ஊரு படங்கள் இன்றும் காலம் தாண்டி நிற்கிறது. எளிய மக்களின் வாழ்க்கை கதையை பிரதிபலிக்கும் சினிமா என்று மலையாள திரைப்படங்கள் பெயர் வாங்கி வரும் நிலையில்,அதுக்கு விதை நாம போட்டது என உலகநாயகனின் வசனத்திற்கு பொருத்தமானவை தமிழ் திரைப்படங்கள்.
அந்த வரிசையில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் 1979-ம் ஆண்டு திரு.மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "உதிரிப்பூக்கள்" திரைப்படம். இந்த திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" யைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்த படத்தின் கதாநாயகன் (வடிவேலு) நம்ம 7G - ரெயின்போ காலனி கதிரோட அப்பா விஜயன் சார் தான்.
ரமணா படத்துல வர்ற மாதிரி ஜீம் பண்ணு ...ஜீம் பண்ணு ன்னு பாத்தீங்கன்னா தான் அட! இவர்தான் அவருன்னு தெரியும்.
கதாநாயகி (லட்சுமியாக) அஸ்வினி வாழ்ந்திருப்பார். அவரின் தங்கை (செண்பகம்) என்ற பாத்திரத்தில் மதுமாலினியும் , இந்த இருவரின் அப்பாவாக சாருஹாசனும் நடித்திருப்பார்கள்.
நமக்கு தெரிஞ்ச முகம்ன்னு பார்த்தால் இந்த படத்தில் இரண்டு அல்லது மூன்று தான்.
அதுல இவரும் ஒன்னு. சமீபத்தில் திரையுலகைப் பிரிந்த நம்ம அண்ணாமலை படத்தின் அசோக் சரத் பாபு (பிரகாஷ்). அதே செந்தாழம்பூ தொணியில் இருப்பார். இங்க அவர் சுகாதார அதிகாரி.
வித்தியாசமான சிரிப்பினால் கவனம் ஈர்க்கும் குமரிமுத்து. இப்படி வெகு சில பரிச்சையப்பட்ட பாத்திரம்.
கிராமத்தின் அழகியல், அந்த மக்களின் வாழ்வியல் , கொஞ்சம் கூட சினிமானத்தனம் தென்படாத வகையில் படமாக்கப்பட்டிருக்கும். கலப்படமில்லாத ஆழமான வசனங்கள்.
இப்படி அனைத்து துறையும் சரிவிகிதத்தில் இருக்க தனக்கென தனி ராஜாங்கம் நடத்தியிருப்பார் இசைஞானி இளையராஜா!!
சரி! இப்போ கதைக்கு வருவோம். ஒரு கிராமம். அங்க வாழும் பெரிய குடும்பத்து ஆளாக வடிவேலு. அவருடைய மனைவி லட்சுமி. இரு குழந்தைகள். (பவானியும் ,ராஜாவும்)
லட்சுமியின் குடும்பத்தில் வறுமையும் வயதும் கூடிய அப்பா. திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கை.
கூடவே ஊர்மக்கள்.
நம்ம வடிவேலுக்கு தன்னை விட யாரும் நன்றாக இருந்தால் பிடிக்காது. காமமும் , திமிரும் தலைக்கு ஏற ஊருக்கு புதிதாக வந்த சுகாதார அதிகாரியோடு வைத்து தன் மனைவியை ஊரார் முன் கொச்சையாடுகிறான்.
அவளை ஒதுக்கி வைத்து இன்பமடைகிறான்.
தனது மனைவியின் தங்கையை தனது மோகத்திற்கு இரையாக்க எண்ணுகிறான். அதற்கு அவர்களின் வறுமையையும் , பெற்ற கடனையும் முன் வைக்கிறான்.
தன் மனைவி இறந்து சில நாட்களே ஆவதற்குள், வேறொரு திருமணம் செய்கிறான்.
புதிதாக தன் பள்ளியில் சேர்ந்த வாத்தியாருக்கு தன் மனைவியின் தங்கை வரனாக அமைவதைக் கெடுக்க நினைக்கும் அவனின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை ஆழமான பாடமாக எடுத்துள்ளார் நம்ம தெறி பட வில்லன் திரு. மகேந்திரன். டாப் க்ளாஸ்❤
வயலின் இசையோடு ராஜா ஆரம்பிப்பார்.
பிரகாஷை அழைத்துச் செல்ல வரும் ஆட்கள் என்ன கேட்டாலும் எஸ்.. சார்! போடுவர். புதிதாக வந்த வாத்தியார் பள்ளியின் மேனேஜர் வடிவேலுவால் ஜிப்பா போடும் நிலைக்கு தள்ளப்பட்டு , சுதந்திரம் கிடைக்காத வெள்ளைகாரனின் ஊர் என்பதை உணர்வார்.
இரண்டு செ.மீ சிரிப்பு. கண்ணில் திமிரு. நாக்கில் கருநாக விஷம். நானும் நல்லா இருக்க மாட்டேன். அடுத்தவனையும் நல்லா இருக்க விட மாட்டேன். நானே ஊரின் பெரிய மனுஷன் என்ற பட்டம் சூடிய வடிவேலு.
தன் குடும்பத்தின் வறுமை, பிள்ளைகளுக்காக வாழும் நிலை என வலியிலும் சிரிக்கும் லட்சுமி.
அக்காவின் வீட்டிற்கு ஒரு வேளையாவது திருப்தியான உணவு உண்ண வரும் தங்கை.ஏழ்மையிலும் அறம் தவறாத அப்பா என பாத்திரப்படைப்பு எல்லாம் மிரட்சியே.
ஒரு பாத்திரம் சரியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்த ஒரு காட்சி தான் உதாரணம்.
முடி திருத்துபவர் லட்சுமியின் மகனுக்கு மொட்டை போட்டால் தனக்கு சன்மானம் கிடைக்கும் என எண்ணி அடிக்கடி கேட்பார். ஆனால் லட்சுமி நேரம் வரட்டும் என்பார்.
கடைசியில் லட்சுமி இறந்து ,அவள் மகன் மொட்டை போட அமர்வான். இதை என்னைச் செய்யச் சொல்லாதீர்கள் என அவன் எழுந்து அழுவான். அற்புதமான மனித மாண்பு.
நீங்க மனுசனா இருந்தா பேசலாம்ன்னு சாருஹாசன் சொல்ல நான் மிருகம்தான்னு சீரும் வடிவேலு, கடைசியில் மனம் திருந்தும் இடம் பல காலங்களுக்கு பேசப்படவேண்டிய ஒன்று.
ஜானகி அவர்களின் குரலில், கவியரசர் கண்ணதாசன் வரிகளில் ,
அழகிய கண்ணே பாடல் காயத்திற்கான மயிலிறகு.
தேவைப்படும் போது அந்த பாடலின் ராகங்களை மலர வைத்து கடைசியில் பாரம் சேர்க்கிறார் இசைஞானி.
பணம், புகழ், ஆஸ்தி, என எத்தனை இருந்தாலும் நல்ல அறம் கொண்ட மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ்வில் வசந்தங்கள் இருக்கும்.
ஆணாதிக்கம், பெண்களின் நிலை, பசி, வறுமை, கல்வி, அத்தியாவசியம் என பல கோணங்களில் மகேந்திரன் அவர்கள் படத்தில் பேசியுள்ளார்.
நான் அடிச்சா நீ செத்துருவ.
நான் மனுசன். காந்தி இல்லை.
அவளுக்கு சாவுக்கு மேல ஒரு தண்டனை .
போன்ற இக்கால சினிமா பயன்படுத்தும் பல காட்சியமைப்புகள் இங்கே இருந்து கிளம்பியவை தான்.
நதியோடு பயணிக்கும் அந்த லட்சுமியின் பவானியும் , ராஜாவும் -உதிரிப்பூக்கள்.
Film: Uthiripookal (1979)
Comments
Post a Comment