உங்களின் ஊர் உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறது! ‌- பேரன்புடன் மெய்யழகன்!


நீண்ட இடைவெளி!

'96 - இன்றும் பலருக்கு நெருக்கமான படைப்பு.

ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் தேர்ந்த பாத்திரங்களாக இல்லாமல் நமது வாழ்வோடு ஒன்றி இருப்பார்கள்.



"நரை வந்த பிறகே, புரியுது உலகை" என பிரதீப் குமாரின் குரல் இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

இப்படி பல பரிமாணங்களில் வாழ்வியலைப் புரட்டிப் போட்ட படைப்பாளரைக் காணவில்லை.


மீண்டும் வருகிறார் பிரேம்குமார்.

சென்ற முறை - காதல்.
இந்த முறை - அன்பு. அதுவும் பேரன்பு.

அழகிய தமிழ்ப்பெயர் இதனுடன் சேர்ந்து கொள்கிறது.

 மெய்யழகன்!!


கதை மாந்தர்களாக கார்த்தியும், அரவிந்த் சுவாமியும். வித்தியாசமான இந்த இணைப்பு கவனம் பெறுகிறது.

ஆரம்பம் முதலே தமிழுணர்வினை நெடுகிலும் நிறைத்து வைத்திருக்கிறார் பிரேம்.

கிளர்வோட்டம் வருகின்றது,
புரட்டாசியில் வெளியீடு என்கின்ற அழைப்பிதழுடன்.
இதுவே ஆகச் சிறந்த பேரன்பும், பெருமிதமும்.


சொந்த ஊரைப் பிரிந்து சென்ற ஒருவன், மீண்டும் தனது சொந்த ஊருக்கு ஓர் கல்யாணத்திற்காக விருப்பமில்லாமல் அரை மனதுடன் வருகிறான். வந்த இடத்தில் அவனுடன் யார் என்றே அடையாளம் தெரியாத ஒருவன் உபசரிப்பில் "அத்தான்" என அன்பு மழை பொழிகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. 


அருள்மொழியாக அரவிந்த்சுவாமி. 

சிறு வயதில் ஊரைப் பிரிந்து செல்லும் அந்த ஏக்கத்தை மீண்டும் தஞ்சாவூரில் இறங்கும் போது உயிர்ப்பிப்பார்.

சொந்த ஊரில், தங்கும் விடுதியில் இருக்கிறேன் என மனைவியிடம் சொல்வதில் தொடங்கி, பேருந்தில் செல்ல வேண்டிய இடம் தெரியாமல் பதறும் இடமென சொந்த ஊருக்கு நீண்ட நாள் கழித்து விருப்பமற்று செல்வோரின் பிரதிபலிப்பாக இருப்பார்.

தனது கசப்பான பழைய நினைவுகளில் ஒரு புறம் சிக்கித் தவித்தாலும், தங்கைக்கு பரிசு தரும் காட்சி, பாசம் நிறைந்த ஓர்‌ உணர்ச்சிப் பெருக்கு.

இப்படி ஒரு புறம் அரவிந்த் சுவாமி இருக்க,

நானும் இருக்கிறேன் என அன்புக் கோதாவில் இறங்கியிருந்தார் "அத்தான்" கார்த்தி.

எதார்த்தமான வசனங்களாட்டும், உறவுக்காக ஏங்குவதாகட்டும் கார்த்தி தனக்கான பாதையை தேர்வு செய்யும் விதம் அடடா! ரகம் தான்.

கல்யாண மண்டபத்தில் தொடங்கி,
அத்தானுக்கு பயத்தில் தமிழ் தான் வருகிறது என கிடைக்கும் இடத்தில் எல்லாம் கார்த்தி விளையாடியிருக்கிறார்.


சிறிது நேரமே வந்தாலும் ஸ்ரீ திவ்யா, மீண்டும் திரையில் நல்ல கதாப்பாத்திரத்துடன் வந்துள்ளார். கதாநாயகியின் பங்கு இங்கு குறைவு தான்.


சமையல் கலைஞராக இளவரசு, பேருந்து நடத்துனராக கருணாகரன், சித்தப்பாவாக ராஜ்கிரண் , அரவிந்த் சுவாமியின் மனைவியாக தேவதர்ஷினி, 
எனப் பெரிய பட்டாளமும் உள்ளடக்கம்.


 சிறு சிறு பாத்திரங்களைக் கூட அழகாக வடிவமைத்திருப்பார் பிரேம்.


பெரியாரும் முருகனும் !
அவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள் என ஆரம்பித்து,

நடுகல் கதை. அதன் அரசியல் கண்ணீர் மல்க வைக்கிறது.

சல்லிக்கட்டு கதை . வீரமும் அதன் பெரும்பயனும் என சிலிர்க்க வைக்கிறது.


இளையராஜா இல்லாத நிகழ்வா?அவருடைய பாடல்களை வாழ்வின் அங்கமாக மாற்றிய இடம் அருமை.


இவ்வாறு அத்தியாயங்கள் கார்த்தி- அரவிந்த் சுவாமியின் உரையாடலாய் விரிகின்றது.


இப்படியொரு அன்பினை அரவிந்த் சுவாமி என்னும் அருள்மொழிக்கு பொழிபவன் யார்?  ஏன்‌? 

 என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நமக்கு உலக நாயகனின் குரலில் "யாரோ இவன் யாரோ" பாட வைத்து இசையில் நெகிழ வைக்கிறார் கோவிந்த் வசந்தா.

கோயில் நந்தி, கோயில் யானை ,
வாடிவாசல், இரவு சத்திரம், ஆற்றங்கரை, கொல்லைப்புற இடம் , தஞ்சாவூர் தெருக்கள், நீடாமங்கல பாசனப் பகுதி என  ஒளிப்பதிவு கவிதை சொல்கிறது.


இப்படி எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள்? என்ற எண்ணம் நிச்சயமாகத் தோன்றலாம்.


இன்னும் சில கிராமங்களில் அன்பும், உபசரிப்பும், கள்ளங் கபடமற்ற மனிதர்களும் இருக்கிறார்கள். இருக்கத் தான் செய்கிறார்கள்.


சிறிய விரிசலை பெரிய விரிசலாக மாற்றி சொந்த ஊர், உறவு, என ஏதும் வேண்டாமல் சம்பாதனை மட்டுமே வாழ்க்கை என நகரும் அனைவருக்கும் அன்பே அருட்பெரும் மெய் என்கிறார் பிரேம் குமார்.


உங்களது ஊர் உங்களை வரவேற்கும்.
அந்த மணல் காற்று‌ உங்களுடைய உயிரை மீட்கும்.
எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.


 பிறந்த மண். 
வாழ்ந்த இடம்.
 கிடைக்கப்பெற்ற மக்கள்.
 இவையெல்லாம் ஒருமுறைதான். வெற்று வெறுப்பையும் தேவையற்ற பிடிவாதத்தையும் விலகிக் கொஞ்சமாவது
 அன்பைப் பகிருங்களேன் என்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.



நீங்கள் இருக்கும் போதே உங்கள் பெயரையாவது உங்கள் சொந்தங்களுக்குத் தெரிய வைக்கலாம்....

தமிழரின் பெரும் வரலாறும் ,
அவரவர் குடும்பத்தின் வரலாறும் தெரிய வேண்டும் என அன்புக் கட்டளை போட்டு கதவைத் திறக்கிறார் மெய்யழகன்.


எழுத வேண்டாம் என நினைத்துக் கொண்டு இருந்தேன்!!

எழுதியே ஆக வேண்டும் என நிர்பந்தத்திற்கு தள்ளிவிட்டது இந்தக் குறிஞ்சி மலர்!!

மெய்யழகனை புத்தகமாக வெளியீங்களேன்... பிரேம் அவர்களே.
வாசிப்பாளர்களுக்கும் பிடிக்கும் விதமாக.


நல்லதொரு படைப்பாக நீண்ட நாள் கழித்து திரையில் வந்துள்ளது. 

Comments

Popular posts from this blog

உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்